வியாழன், 29 ஜனவரி, 2015

குறுங்கதை # 11 ஞானக்கண்



மருத்தவமனையில் இறுதி காலத்தை நெருங்கிக்கொண்டிருந்த இரு நோயாளிகள் ஒரு அறையில் படுக்கவைக்கப்பட்டிருந்தனர்,ஒருவர் தன் உடலை நகர்த்தக்கூட முடியாத நிலையிலிருந்தார்.அவர் விழித்திருக்கும்பொழுதெல்லாம் முகட்டைப் பார்த்தவாறு அமைதியற்று புலம்புவார்.மற்றொரு நோயாளி அந்த அறையின் ஜன்னல் அருகிலிருந்த படுக்கையில் படுத்திருந்தார். அவர் தன் சக நோயாளியின் புலம்பலைக்கேட்டு,மறு நாள் காலையில் அவரை அழைத்து, ஜன்னல் வழியாக தான் காணும் காட்சிகளை விவரித்தார்.

பொழுது புலரும் காலை வேளையில் தினசரி பேப்பர்களை லாகவமாக் வீட்டிற்குள் வீசியெரியும் பையனைப்பற்றி,வாசல் தெளித்து கோலமிடும் பெண்களின் கைவண்ணத்தைப்பற்றி,பால்காரன் பால் ஊத்தும் நேர்த்தியைப்பற்றி,நடை பயிலும் மக்களின் வயதுபற்றி அவர்கள் அணிந்திருந்த உடைகள் பற்றி,இன்னும் பல நிகழ்வுகளை சுவையாக விவரித்தார்.அதைக்கேட்டு மகிழ்ந்த நோயாளி தன் இயலாமை குறித்த கவலைகளை மறந்து இன்புற்றார்.,

ஜன்னல் அருகிலிருந்த நோயாளியும்,பக்கத்துப் படுக்கை நோயாளியின் வேண்டுகோளுக்கிணங்கி தினமும் காலையில் வீதியில் நடக்கும் நிகழ்வுகளை புத்துணர்ச்சியூட்டும் வகையில் விவரிப்பதை வழக்கிமாக்கிக் கொண்டார்.மற்றவரும் காலை புலராதா,என எங்குமளவிற்க்கு தினம் தினம் இந்த நேரடிக்காட்சிகளின் வருணணை தொடர்ந்தது.

அன்று காலை ஜன்னலோர நோயாளியிடமிருந்து வழக்கமாக கூறப்படும் வருணணை கேட்கவில்லை.என்னவாயிற்று என்று பதற்றபட்டவரிடம் செவிலியின் செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆம்,ஜன்னலோர நோயாளி அமைதியாக் தன் வாழ்க்கைப்பயணத்தை முடித்திருந்தார்.
மறைந்த நோயாளியை,அப்புறப்படுத்தினார்கள்.ஜன்னலோர காட்சிகளை விவரிப்பார் யாருமில்லை.

ஜன்னலோர நோயாளியின் மறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டு தானே அந்த படுக்கைக்கு மாற்றப்பட்டால் தன் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் தலை தூக்கி அக்காலைக் காட்சிகளை காணலாம் என்ற் முடிவிக்கு வந்தவ்ர் அவ்வாறே தன்னை ஜன்னலோர படுக்கைக்கு மாற்ற வேண்டினார். அவர் விருப்பப்படியே,அன்று இரவு ஜன்னலோர படுக்கைக்கு மாற்றப்பட்டார்.

விடிவை எதிர் நோக்கி காத்திருந்த நோயாளி விடிந்ததும் தன்னை வருத்தி சாய்ந்து தலை தூக்கி ஆவலுடன் ஜன்னல் வழியாக பார்த்தார்.அவர் கண்ட காட்சி ஏமாற்றத்தையளித்தென்பதைவிட ஆச்சரியத்தின் எல்லைக்கோட்டைத்தொட்டார் என்பதுதான் பொருத்தமாகவிருக்கும்.ஜன்னருகில் ஒர் உயர்ந்த சுவரிருந்தது

.அப்படியென்றால் மறைந்த நோயாளி விவரித்த காலைக்காட்சிகள்?
செவிலியிடம் இது பற்றி விசாரித்தபொழுது,இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது.ஜன்னலோர நோயாளி ஒரு பிறவிக்குருடர்.

காரண காரியங்களை அறிய முயற்ச்சி செய்யாது தன் சக நோயாளியின் மனித நேயத்தை வியந்து,தன் அகக் கண்களால் ஜன்னலோர நோயாளி விவரித்த காட்சிகளை விருப்பமேற்படும் பொழுதெல்லாம் கண்டு களித்து தன் மரணத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்.