திங்கள், 1 டிசம்பர், 2014

குறுங்கதை # 8 கண்ணே கண்மணியே- - -



பார்வையிழந்த அவளுக்கு ஒரே ஆதரவு அவளுடைய காதலன்தான்  அவன் காட்டிய அன்பு வளைத்திக்குமுக்காட வைத்தது. சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் தன் விருப்பத்தை அவனிடம் கூற தவருவதேயில்லை.

 ”உன்னை என்  உயிரின்மேலாக  காதலிக்கிறேன். நீயில்லாத வாழ்க்கையை  என்னால் கற்பனைபண்ணிகூட பார்க்கமுடியவில்லை.என் பெற்றோர்கள் கண் தானம் பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் .நிச்சயம் நான் இழந்த பார்வையைப் பெறுவேன். அக்கண்களால் உன்னைத்தான் முதலில் பார்க்கவிரும்புகிறேன். 

 நம்  வருங்காலம் பிரகாசமாக  தெரிகிறது. 
அதுவரை  நீ பொறுத்திருக்கவேண்டும், பின்  நம் திருமணம் செய்ய எந்த தடையுமிருக்காது” என்று கூறி மகிழ்ந்து காதலனையும் மகிழ்விப்பாள்..

அவள்  விரும்பியபடியே கண்கள் தானமாக கிடைத்தன,கண் பார்வையைப் பெற்ற அவள் தன் விருப்பப்படியே தன் காதலனை அருகில் அழைத்து கண்களைத்திறந்து அவனை ஆவலுடன் பார்த்தாள்.பேரதிர்ச்சியடைந்தாள்.அவன் காதலனும் பார்வையற்றவனாகவிருந்தான்.

பின்பு மருத்துவ மனையில் தன்னுடனிருந்த காதலனிடம் முன்போல் அன்புடனோ,நெருக்கமாகவோ பழகவில்லை.
வீடு திரும்பவிருந்த அன்று காதலனிடம் “ பார்வையற்றவளாக நான் அனுபவித்த துன்பத்தை பார்வைபெற்றபின்னும் பார்வையற்ற உங்களை மணந்துகொண்டு தொடர்ந்து அனுபவிக்க நான் விரும்பவில்லை.எனவே என்னை மன்னித்துவிடுங்கள்,.”என்று இரக்கமின்றி கூறியதைக்கேட்ட காதலன் செய்வதறியாது வேதனையுடன் அங்கிருந்து வெளியேறினான்.

கரைகாணா உற்சாகத்துடன்,வீடு திரும்பிய அவளுக்கு காதலனிடமிருந்து,ஒரு குறுஞ்செய்தி வந்தது. “இனியவளே,என் கண்களையாவது,உன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து நேசிப்பாய் என நம்புகின்றேன்”

கருத்துகள் இல்லை: