ஞாயிறு, 23 நவம்பர், 2014

குறுங்கதை # 7 கருணைக்கும் உண்டோ வரம்பு - - - -




மலையடிவார பேரூரொன்றில் பள்ளி மாணவனொருவன் தன் படிப்பைத்தொடர விடுமுறை நாட்களிலும் மாலை வேளைகளிலும் வீடு வீடாக சென்று பொருட்களை நேரடி விற்பனை செய்து பணம் சம்பாதித்தான்.

அப்படிப்பட்ட ஒரு விடு முறை நாளன்று,வீடு வீடாக ஏறி இறங்கியதில் களைப்புற்று,பசியுமேற்பட ஏதாவது சாப்பிடாலாமென்றெண்ணி அருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையை நோக்கிச்சென்று,என்ன வாங்கலாம் என்று யோசித்தவாறு பொருட்களை நோட்டமிட்டான்.சட்டென்று அப்பொழுதுதான் தன்னிடம் போதிய காசு இல்லை என்பதை உணர்ந்தான்.உணர்ந்த மறுகணமே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.

அச்சமயம்,கடையிலிருந்த சிறுமி,”அண்ணே,கொஞ்சம்,கடையை பார்த்துக்கங்க,வீட்டுக்கு போயிட்டு வந்த்ரேன்”என்று கூறிவிட்டு அவன் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.
சிறிது நேரம் கழித்து ஒரு சொம்பு நிறைய மோர் கொண்டு வந்து “ குடிங்கண்ணே என்று நீட்டினாள். பசி கிரக்கத்திலிருந்த மாணவன் அதை ஆவலோடு வாங்கி குடித்தபின்தான் என்ன நடந்தது என்று உணர்ந்தான் .தான் பசியால் வாடுவதையும் பொருளெதுவும் வாங்கும் நிலையில்லையென்பதை அறிந்து தக்கதருணத்தில் மோர் தந்து உதவியதை வியந்து,”மோருக்கு எவ்வளவு கொடுக்கனும் என்று கேட்டுவைத்தான்.

“தவிச்ச வாயிக்கு தண்ணி கொடுத்து அதுக்கு காசு வாங்ரது நம்ம ஊர் பழக்கமாண்ணே”என்று அச்சிறு,மி கேட்டது கன்னத்தில் அறைந்ததுபோலிருந்தது.

ஆண்டுகள் பல சென்றன. பெரியவளான அச்சிறுமி நடுத்தர நகரமொன்றில் பணியாற்றும் பொருட்டு தினமும் பேருந்தில் சென்று வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட பயணத்தின்போது, விபத்திற்குள்ளாகி, பலத்த காயங்களுடன் அம்மாவட்ட பெருநகரிலிருந்த ஒரு ஆஷ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கிருந்த டாக்டர்கள் மூத்த டாக்டருக்கு செய்தியனுப்பி அவர் வருகைக்காக காத்திருந்தனர்.

திருமலையான் டாக்டர் அந்த மாவட்டத்தின் கண்கண்ட தெய்வம்.தீராத வியாதியெல்லாம் அவர் கைபட்டாலே குணமாகிவிடும் என்ற நம்பிக்கைக்கு பாத்திரமான அவர் வந்ததும் நோயாளின் நிலமை குறித்து விவாதித்தனர்.மண்டையில் பலத்த அடியின் காரணமாக அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.அதர்க்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன,

திருமலையான் டாக்டருக்கு அந்த பெண் எங்கிருந்து வந்திருக்கிறாள் என அறிந்ததும்,அவளைப்பார்க்க வார்டுக்குச்சென்றார்.அவர் அங்கு கண்டது வேரு யாருமல்ல தனக்கு அன்று மோர் கொடுத்தவள் என்று அறிந்ததும்,வேதனைப்பட்டார். இருப்பினும் தன் சக்தியுட்பட்ட தீவிர முயற்சியினால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து உயிர் பிழைத்தெழுந்தாள்.

ஒரிரு வாரங்கள் சென்றபின் குணமாகி வீடு திரும்பும் சமயம் பில் கட்டவேண்டிய நிலையில் அதர்க்கான பணத்தை ஏற்ப்பாடு செய்ய ஊருக்குச்சென்றிருந்த தந்தையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.அது சமயம் செவிலி பில்லைக்கொண்டுவந்து கொடுத்தார்

. தனது சக்திக்கு மீறின தொகையாகவிருக்குமோவென பயந்துகொண்டே பில்லைப்பிரித்துப்பார்த்தாள் .என்ன ஆச்சரியம் “ பணம் செலுத்தப்பட்டு விட்டது—விலை மதிப்பற்ற ஒரு சொம்பு மோரின் மூலமாக “ என்றதைப் பார்த்ததும் அந்த அண்ணன்தான் புகழ்பெற்ற டாக்டர் திருமலையான் என்று அறிந்து நன்றிப்பெருக்கினால் கண்ணீர் விட்டாள்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

குறுங்கதைகள் --- முன்னுரை




வலைத்தளம்,ஆரம்பித்தவுடன் நான் சந்தித்த முதல் சவால் தமிழை(,எனது தாய் மொழியை) பிழையின்றி எழுதுவதுதான், பணி மொழியான (professional Language) ஆங்கிலத்தையே  பல ஆண்டுகளாக பயன்படுத்தியன் விளைவாக, தாய்மொழியைக் கையாளுவதிலேற்பட்ட சிக்கல்களும்,சிரமங்களும்,சொல்லி மாளாது.எனவே,ஒரு அகராதியை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமுண்டாகி, கூகுளாரை அனுகினேன்
.ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது,அது Pals eDictionary மூலம் வந்தது. ஆங்கிலத்தில் ஜாம்பவானாக கருதப்படும் அகராதிகள் போன்று அமைந்திருந்த ஒன்று கிடைத்தது,மட்டற்ற மகிழ்ச்சியளித்தது என்று கூறினால்.அது மிகையாகாது.
அத்தகைய அகராதியை புரட்டிக்கொண்டிருக்கும்போது,ஒரு வார்த்தை என்னை சுண்டியிழுத்தது.Anecdotes: இந்த வார்த்தைக்கு ஒரு நீண்ட விளக்கமிருந்தது,அதில் முதலில் காணப்பட்டது “தனியொரு நிகழ்வினையொட்டிய சிறுகதை” என்பது.சில விளக்கங்களுக்குப்பின், anecdotage:chattering old age,the age at which one is addicted to anecdotes: சிறுகதை சொல்வதில் முனையும் கிழ வயது. என்று காணப்பட்டது.இந்த விளக்கங்களின் தாக்கம்தான்,ஒரு புது முயற்சியை மேற்கொள்ள தூண்டியது,
கதைகள் படிப்பதிலுள்ள சுவாரசியத்தை சொல்லி தெரியவைக்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் கருதுகிறேன் .எத்தனை எத்தனை கதைகள் ! பஞ்சதந்திர கதைகள்,ஈசாப் கதைகள், தெனாலி ராமன் கதைகள், பீர்பால்-அக்பர் கதைகள்,பரமார்த்த குரு கதைகள் ,ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள்,என அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகள் தவிற,சமீப காலமாக உலவிவரும் ஜென் கதைகள்,டாவோ கதைகள்,சீனாவின் பரிசுகள்.
  நமக்கு அதிகமாக அறிமுகமாத சுஃபி கதைகள் சிறப்பானவைகள், இஸ்லாமிய மறை மெய்ஞ்ன கோட்பாடுகளை உள்ளடக்கியவைகள், இத்தகைய பழம் கதைகளுக்கு போட்டியாக
,சுய முன்னேற்றம், மனிதநேயம், போன்றவைகளை  ஊக்குவித்து உற்சாகமூட்டும் நவீன கதைகள் ஏராளமாக உலவிக்கொண்டிருக்கிறன.
அக்கதைகள் பல்வித உணவுகள் போல உண்டு களிக்க காத்திருக்கின்றன,நாம் நமக்கு பிடித்த பதார்த்தங்களை தெரிவு செய்து உண்ண தடையேதுமுண்டோ?
அன்பர்களே,நான் நான் பதிவு செய்யப்போகும் கதைகள் பல உங்களுக்கு தெரிந்ததாகவிருக்கும்,ஏனெனில் இவைகளின் மூலம் ஒன்றுதான்.படைப்பாளிகள்தான்,பலர், நானும் அவர்களில் ஒருவன்,எனக்குப்பிடித்த,உங்களுக்கும் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில்,மேற் கூறிய என்றும் சுவை மாறா களஞ்சிய கதைகளை அவ்வப்போது உங்களுக்கு என் நடையில் வழங்கவிருக்கிறேன்..நிச்சயம் ரசிப்பீர்கள்,இராமாயணத்தையும்,மஹாபாரதத்தையும் திரும்பத் திரும்ப கேட்டு, படித்து ரசிப்பது போல.
காக்க காக்க கனகவேல் காக்க, என்பதுபோல் கதைக்க கதைக்க கருணை காட்ட என்று வேண்டி, குறுங்கதைகள் என்ற தொடரை எழுதி உங்களை மகிழ்விக்கவிருக்கிறேன்.

குறுங்கதை # 4 கோமனத்தை காப்பாற்ற முயன்று- - - -





அது ஒரு வனப்பகுதி. அதிலொரு சந்நியாசி வாழ்ந்தார்,சந்நியாசிகளுக்கே பெருமை தரும் எளிய வாழ்க்கை முறையை அனுசரித்து,நாள்தோரும்,அடிவார கிராமத்திற்குச் சென்று,பிச்சையெடுத்து,தன் அன்றாட உணவுத்தேவையை நிறைவேற்றிக்கொள்வது அவரது தினசரி கைங்கரியங்களிலொன்று.

..நாளாக நாளாக,கிராம மக்கள் அவருக்கு பிச்சையிடுவதை தவிர்க்கவே விரும்பினர்.அவர்களொன்றும் பெரும் வசதிபடைத்தவர்களல்லவே..

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,சந்நியாசிக்கு, ஒரு சோதனை ஏற்பட்டது ,கோமனம் சம்பந்தமாக. அவரிடமிருந்ததோ இரண்டு ,ஒன்று அணிய மற்றொன்று கொடியில் உலர என்றிருந்தன ,சில நாட்களாகவே, உலரவைத்த கோமனம், காணாமல் போய்க்கொண்டிருந்தது, வேறு வழியில்லாமல் ,உணவோடு ,கோமனத்திற்காக பழைய துணிகளையும் யாசித்தார்.
 ஏற்கனவே எரிச்சல்பட்டுக்கொண்டிருந்த கிராம மக்கள் முணங்க ஆரம்பபித்தனர்.”சோறு போடுவதே தண்டம்,அதோடு கோமனத்திற்கு துணி வேறு வேண்டுமாக்கும்”என்று புலம்பினர்
.
அத்தோடு நிற்காமல், துணி யாசிப்பதின் ரகசியத்தை கண்டுபிடித்தனர் .உலரப்போடும், கோமனத்தை, காட்டெலிகள் கவ்விக்கொண்டு கம்பி நீட்டிக்கொண்டிருந்தன. பாவம் சந்நியாசியும் வேறு வழியில்லாத காரணத்தால்தான்  கோமனத்திற்கு துணி யாசித்தார் என்பதை அறிந்த கிராமமக்கள் ஒரு யோசனையும் கூறினார்கள் பூனை வளர்த்தால்,அது எலிகளை விரட்டியடித்து, துணியைக்காப்பாற்றும் என்றதோடல்லாமல்,ஒரு பூனையையும் கொடுத்தனர்.

 கோமனத் ,திருட்டு நின்றது. ஆனால் அடுத்த பிரச்சினை  உருவாகியது..

மறு நாள் யாசிக்க வந்த சந்நியாசி,பசியால் வாடும் பூனைக்கு பால் வேண்டும் என்றார்.

சோற்றோடு துணி கேட்ட பரதேசி,இப்பொழுது பால் வேறு கேட்கிறாரே என்று சங்கடப்பட்டாலும், பூனை கொடுத்த நாம் அதைக்காப்பாற்ற பால் கொடுப்பது கடமையென்று கருதி ,பாலும் உணவும் கொடுத்தனர்.

நாட்கள் நகர்ந்தன, பால் கொடுத்து சலித்துப்போன மக்கள் ,ஒரு பசுமாட்டை தானம் கொடுத்து இதை வைத்து பால் கறந்து, பூனைக்கு கொடுத்து, பால் யாசிப்பதை கைவிடச்சொன்னார்கள்.

மாட்டை தானம் பெற்ற நாளிலிருந்து சந்நியாசி ஊருக்குள் செல்வதைத் தவிர்த்தார். சந்நியாசியின் வருகை குறைந்திருப்பதைக்கவனித்த மக்கள் விசாரித்துப்பார்த்து,ஒரு உண்மையை கண்டுபிடித்தனர்.

பசு மாட்டை வனப்பகுதிகளில் மேய்த்து ஊட்டமளித்து கொழுக்கவைத்து ,பால் கறந்து,திருவோடுகளில் சேமித்து, பூனைக்கு ஊட்டி தானும் குடித்து, உணவத்தேவையை குறைத்துக்கொண்டு, சில நாட்கள் மட்டும் யாசிக்கச்சென்றார்.
 சந்நியாசி, பூனையோடு தானும் கொழு கொழுவென்றாகிவிட்டார். கிராம மக்களும் தொல்லை விட்டதென்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்..

சந்நியாசி சாமியாரானார், ஏனென்றால் இவர் உடம்பை பார்த்தே ஒரு நாடோடி, அவருடைய சிஷ்யனானான் ,சிஷ்யனுக்கு சாமியானார்  நம் சந்நியாசி.

சிஷ்யன் கடும் உழைப்பாளி, அதனால் பால் உற்பத்தி அவர்கள் தேவைக்கதிமாக இருந்தது. எனவே ,உபரி பாலை கிராம மக்களிடம் விற்பனை செய்தனர். .பணம் சேர்ந்தது,

வருமானம் பெருகவும், அதைக்கொண்டு ஒரு காளை மாட்டை வாங்கினார். சந்நியாசி. பசு கன்று ஈன்றது. .படிப்படியாக ,கன்றுகாலிகள் பெருகியதால், பால் பண்ணை ஒன்றை உருவாக்கி அதர்க்குச் சொந்தக்காரரானார்.

பண்ணையாரான சாமியார், ஒரு வீட்டைக்கட்டினார், காடு திருத்தி, கழனி உருவாக்கினார். பண்ணை வருமானம் பெருகியதால் ,வேலையாட்களைச் சேர்த்துக்கொண்டார். கூட்டம் பெருகியதால் பண்ணை விஷ்தரிக்கப்பட்டு, பணப்பயிர்கள் பயிரிட்டு, தானியங்கள் உற்பத்தி செய்து, அதனை விற்பனை செய்து அந்த வட்டாரத்திலேயே செல்வமும் செல்வாக்குமுள்ள  பெரும் பண்ணையாரானார்.

எனவே அந்தஸ்த்திர்கேற்றவாரு, மாளிகையொன்று கட்டி ,ஒரு மங்கை நல்லாளையும் மணந்து, கௌரவமான ஒரு சம்சாரியுமானார்..நமது சாமியார்.

இப்படியாக, சந்நியாசி சாமியானார், ,சாமி பண்ணையாரானார், ,பண்ணையார் பெருங்கொண்ட பண்ணையாகி, சுக போகங்களையனுபவித்து வாழ்ந்து வந்தார்.

வருடங்கள் உருண்டோடின, பண்ணை வீட்டுக்கு ஒரு முனிவர் வந்தார் ,பண்ணையாரும் அவர் குடும்பத்தினரும் அவரை விழுந்து விழுந்து உபசரித்தனர்.

 முனிவரும் மிக்க மகிழ்ச்சியடைந்து. உரையாடிக் களித்த வேளையில் முனிவர் எதிர்பாராதவிதமாக ‘,நான் ‘பல ஆண்டுகளூக்கு முன், இவ்விடத்திற்கு வந்திருந்தபோது ,ஒரு இளம் சந்நியாசி  இங்கு ஜப தபங்களில் ஈடுபட்டு பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தாரே அவர் இப்போது எங்கிருக்கிறார்? அவரை பார்க்க விரும்புகிறேன், என்றார்.

உடனே பண்ணையார் முனிவரின் காலில் விழுந்து சாஷ்டாங்க நமஷ்காரம் செய்து,” ஸாமி, என்னை மன்னிக்கவேண்டும், அந்த சந்நியாசி அடியேனே..

ஒரு கோமனத்தை காப்பாற்ற முயற்சித்து இன்று கோமானாகிவிட்டேன்.

ஆசீர்வதிக்கவேண்டும் என யாசித்தார்.
முனிவரும், இன்முகங்காட்டி, முறுவலித்து  ஆசீர்வாத பிச்சையிட்டு விடைபெற்றார்
_ _ _ ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதைகளில் ஒன்று..

 

ஞாயிறு, 16 நவம்பர், 2014

குறுங்கதை # 6 இறுதி இரவு உணவு ஓவியம்




மிலான் நகர அருளன்னை மரியாவின் கோவிலுள்ளடங்கிய துறவற உணவகத்தில்,ஒரு புற சுவற்றில் இயேசு சிலுவையில் அறைந்த காட்சியை வரைந்து முடித்த பின்,எதிர் புர  சுவரில் இயேசு தன் பன்னிரு சீடர்களுடன் அமர்ந்து உணவருந்திய “இறுதி இரவு உணவு ஓவியத்தை” வரைய அந்நாட்டின் தலைசிறந்த ஓவியரான லியொனார்டோ டா வின்சி நியமிக்கப்பட்டார்.

 ஓவியத்தில் வரையப்போகும் நபர்களையொத்த மாதிரி நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. வின்சி இயேசுவின் ஓவியத்தை வரைந்து தன் பணியை ஆரம்பிக்க விரும்பி,அதர்க்கான மாதிரி நபரைத்தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது .

நாடு முழுவதிலுமிருந்து அழைத்து வந்தவர்களில் ஓவியரின் கனவு இயேசுவிர்க்கான ஒருவர் கிடைப்பது அரிதாகவிருந்தது

.பல நாட்கள் பல தேசங்களில் தேடிக் கொணர்ந்தவர்களில் ஒருவன் கருணையின் வடிவாக இறைத்தன்மையுடன், காணப்பட்டார் .அவனையே மாதிரியாக வைத்து,ஆறு மாதங்கள் காலை முதல் மாலை வரை இயேசுவின் ஓவியத்தை வரைந்து முடித்து திருப்தியடைந்தார்.

 பின் சீடர்களின் ஓவியத்தை வரைய தகுந்த மாதிரியை தெரிவு செய்து யூதாசைத்தவிர மற்ற பதினோரு சீடர்களையும் வரைந்து முடித்தார்,

யூதாசுக்கான மாதிரி நபர் தேர்வு,ஒரு சவாலாகவே இருந்தது. யூதாசு,பணத்தாசையும் அதர்க்காக எந்தபாவத்தையும் செய்யும் கொடூர மனம் படைத்த காரணத்தால்தான் இயேசு பெருமானை ஒரு சில தங்க நாணயங்களுக்காக காட்டிக்கொடுத்து வரலாற்றில் வஞ்சகத்தின் அடையாளமாக அறியப்படுபவன்

அத்தகைய ஒரு நபருக்கான மாதிரி தேடி நாடு நகரங்களெங்கும் அலைந்து ரோம் நகரின் சிறையொன்றில் பல கொலை,கொள்ளை கற்பழிப்பு ஆகிய குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்த ஒருவனை அரசின் உத்தரவு பெற்று மிலானுக்கு அழைத்து வந்தனர்

. அவன் தோற்றம் யூதாசுவின் ஓவியத்திர்க்கு பொருந்தும் என ஆமோதித்த வின்சி அவனை மாதிரியாக வைத்து ஆறு மாதங்களுக்கும் மேலாக காலை முதல் மாலைவரை கடினமாக உழைத்து, யூதாசு என்ற துரோகியின் ஓவியத்தை வரைந்து முடித்தார். 

ஓவியம் முடிந்ததும் கைதியை சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல காவலர்கள் வந்து விலங்கிட முற்படுகையில் அந்த கைதி வின்சியை நோக்கி விரைந்து அணுகி " ஐயா,என்னை யாரென்று தங்களுக்கு தெரியவில்லையா" என்று கேட்டான். 

 இந்த கேள்வியை எதிர்பாராத வின்சி “இல்லையே என்றார். தொடர்ந்து, "என்னை சற்று உற்றுநோக்கிப் பாருங்கள் ,என்னை முன் பின் பாத்ததில்லையா” என்று பரிதாபமான குரலில் கேட்டான். டா வின்சியும் உன்னை கடந்த ஆறு மாதங்களாகத்தான் தெரியும், அதர்க்கு முன் பார்த்ததேயில்லை என்றார். 

 கைதி கண்ணீர் விட்டுக்கதறி “ ஐயா ஆறு வருடங்களுக்கு முன் நான் இங்கு ஓவிய மாதிரியாக தங்களிடம் பணியாற்றிருக்கிறேன். தாங்கள் அப்பொழுது என்னை மாதிரியாக வைத்து வரைந்த ஓவியம்தான் இயேசுவுனுடையது.” என்றான்.

 லியொனார்டோ டி வின்சியின் தலை சுற்றியது.

சனி, 15 நவம்பர், 2014

குறுங்கதை # 2 பாம்பென்றால்- - -!




   

அது ஒரு செழிப்பான ஊர்.திருவிழாக்களும் கொண்டாட்டங்களுமாக ஊரே கல கலப்பாகவிருக்கும்.காலட்சேபம் தெருக்கூத்து போன்றவைகளும் அன்றாட நிகழ்சியாகவிருக்கும்
வயல் வெளியிகளில் சிறுவர்கள் ஒடியும் குதித்தும் கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர்.அது சமயம் பாம்பொன்று அங்கு படுத்திருந்ததை கண்டு அலறிக் கொண்டு வீடு திரும்பினர்.
மறு நாள் சென்ற போதும்,பாம்பு படுத்திருந்தது, பயந்துகொண்டு விளையாடாமல் வீடு திரும்பினர்
,பாம்பின் அச்சுறுத்தலின் காரணமாக தொடரும் நாட்களிலும் சிறுவர்கள் விளையாட முடியவில்லை.
ஏமாற்றத்துக்குள்ளான சிறுவர்களில் தைரியசாலியான ஒருவன், விளையாட தடையாகவுள்ள பாம்பை தீர்த்துக்கட்டிவிடுவது என்று முடிவுசெய்தான்
அவன் தோழர்களும் அவனை ஊக்கப்படுத்தினார்கள்.
கல் ஒன்றை எடுத்து தன் முழு பலத்துடன் பாம்பை நோக்கி எறிந்தான். குறி தவரவில்லை .நச்சென்று பாம்பின்மேல் பட்டது.
ஒன்று பாம்பு,அடி வாங்கி செத்திருக்கவேண்டும், அல்லது சீறிக்கொண்டு அங்கிருந்தவர்களை கொத்த வந்திருக்கவேண்டும்.
என்ன ஆச்சரியம் அடிபட்ட பாம்பு எதுவுமே நடக்காதது போல் அசையாமல் படுத்திருந்தது.
பாம்பு அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, சிறுவர்களை  ஆச்சரியப்பட       வைத்ததைவிட பீதியைத்தான் உண்டாக்கியது.   
 இருப்பினும்  சிறுவர்கள்  அனைவருமே தைரியமாக ஒருவர் மாற்றி ஒருவர் கல் எறிவதும் பாம்பும் சும்மா இருப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.
அடிமேல் அடி வாங்கிய பாம்பின் நிலமைதான் மோசமாகி இறக்கும் தறுவாயிலிருந்தது.
இதை அறிந்த தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஆன்மீக சொற்பொழிவாளர்,அந்த கூத்து நடக்கும் இடத்திற்கு சென்று என்னதான் நடக்கிறதென்று அறிந்துகொள்ள விரும்பினார்
அங்கு சென்ற ஆன்மீக சொற்பொழிவாளரைக் கண்ட பாம்பு பேச ஆரம்பித்தது.’ ஐயா மஹானே ,நான் தங்கள் தீவிர ரசிகன்.தங்களுடைய அறிவுரை கேட்டு அதன்படி நடக்க முடிவெடுத்து, சிறுவர்கள் என்னை கல்லால் அடித்து துன்புறுத்தியையும் பொருட்படுத்தாமல் அமைதி காத்தேன், இன்று எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா, சாகும் தறுவாயில் இருக்கிறேன் என்று புலம்பியது..
கட கடவென சிரித்த ஆன்மீக சொற்பொழிவாளர்,’ அட முட்டாளே, மக்களை துன்புறுத்தாதே, என்று நான் கூறியதை தப்பாக புரிந்துகொண்டிருக்கிறாய்.. பாம்பாகிய நீ கொத்தினால் துன்புறுத்துவதாகும். ஆகையால் சிறுவர்களை தீண்டாமலிருந்தது சரி,
ஆனால் நீயே துன்பத்திற்குள்ளாகும் போது, உன்னைக்காப்பாற்றிக்கொள்ள படமெடுத்து சீறி பயமுறுத்தி சிறுவர்களை விரட்டியடிக்கக்கூடவா  உனக்கு தோன்றவில்லை ,என்று கூறிவிட்டு  ஊருக்கு திரும்பினார்..
பிறகென்ன ,சீறும் பாம்பை சீண்டுமளவுக்கு

தைரியமுள்ளவர்களா அச்சிறுவர்கள்.

மேlலாளர்களுக்கு, இக் கதை ஒரு தந்திரததை கற்றுக்கொடுக்கிறது என்பது என் கருத்து: ஒருவருடைய அதிகாரத்தை (குணாம்சத்தை) தினம் தினம் தம்பட்டமடித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவ்வப்பொழுது, அதிகாரத்தின் வலிமையை  தங்கள் இயற்புக்கேற்ப, ஞாபகபடுத்தும்படியாக நடந்துகொள்வது  நிர்வாகம் சிறப்பாக செயல்பட பெரிதும் துணை புரியும்..