சனி, 1 நவம்பர், 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே………….




மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கிய நெய்வேலி நிறுவனம்,ஆரம்பகால சோதனைகளை சந்தித்தென்பது எதிர்பார்த்தவொன்றாகவிருந்தாலும்,
சோதனைகள் சவால்களாக மாறியபொழுது பல இன்னல்களுக்குற்படுத்தபட்டது. நிறுவனத்தின் முதுகெழும்பே சுரங்கம்தான்.எனவே அதன் உற்பத்தி திறன் திட்டமிட்ட இலக்கை அடையாதபோது,மின் உற்பத்தி உர உற்பத்தி பாதிக்கப்படுவது இயல்புதானே.

நெய்வேலி சுரங்கம்,ஒரு திறந்தவெளி சுரங்கம்.கனிமத்தை வெளிக்கொணர அதன் மேலமைந்த மண்ணை நீக்குவதுதான் தலையாய பணி. இக்குறிக்கோளை எட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் நுட்பம்,வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டது. வாளி சக்கர எந்திரங்கள் (Bucket Wheel Excavators),(Belt conveyors) தொடர் பட்டைகள், பரப்பி எந்திரங்கள் (Spreaders) ஆகிய சிறப்பு சுரங்க உபகரணங்களை (S M E-Specialised Mining Equipments ) உபயோகித்து மேல்மண் அகழ்வது (overburden removal) (Lignite excavation) பழுப்பு நிலக்கரி எடுப்பதென நமக்கு புதிதானவொரு தொழில்நுட்பத்தை கையாண்டோம்.இத்தொழில் நுட்பம் ஜெர்மனி சுரங்கங்களில் கையாண்டு நிரூபிக்கப்பட்டவொன்று.

ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டங்கள் உருவாக்கப்பட்டபோது எதிர்பார்த்த சவால்கள், நிலத்தடி நீரின் மேல்நோக்கிய அழுத்தம். மண்வாகு ஆகியவைகளே. நிலத்தடி நீரழுத்தத்தை நீரை பெருமளவு உறிஞ்சியெடுத்து சமாளித்தபோதும், மண்வாகுவினால் உண்டான பிரச்சினைகள் அனேகம் என்பது கற்பனைக்கெட்டாதது. அப்படியென்றால் அந்த மண் எப்படிப்பட்டது என்ற கேள்வி எழத்தானேசெய்யும்?

புவியியலாளர்கள் இம்மண்ணை கரடுமுரடான சொற்களால் கூறி நம்மை பயமுறுத்திவிடுவார்கள். சுருக்கமாக கடலூர் மணற்கல்(cuddalore sandstone) என்று சொல்லலாம்..மிகவும் சிராய்ப்புத்தன்மை(abrasive) கொண்டது. பெயரைப்பார்த்தாலே புரியும், பாம்பென்று தாண்டுவதா, பழுதென்று மிதிப்பதா என்ற வகையென்று

. எந்திரங்கள், மண்ணைவெட்டி முன்னேறும்போது, கலப்படமான மண் வகைகளை சந்தித்துக்கொண்டேயிருக்கும். பெரும்பாலான நேரம் ,கடினமான, சிராய்ப்புத்தன்மை வாய்ந்த மண்ணை அகழும்போது, வாளிச்சக்கர அகழ் எந்திரங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

. வெட்டும் 90 பற்களும்.கல்லை மோதினால் எந்திரத்திற்கு அதிர்வேற்படாமலாவிருக்கும் இத்தகைய  இடையூறுகளால் ,எந்திரங்கள் பழுதடைந்தன, அது சார்ந்த மற்ற எந்திரங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டது. உற்பத்தியும் மிகவும் பாதிப்புக்குள்ளானது,
சுரங்கம் வேண்டிய அளவு, பழுப்பு நிலக்கரியை உற்பத்தி செய்யாததால், மற்ற தொழிற்சாலைகளின் உற்பத்தியும் ,குறிப்பாக மின் உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டது .சுரங்க உற்பத்தி முழுத்திறனை எட்டாத நிலையில், நிறுவனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியானது
.
1967-68 வரையில்,சுரங்கம் மின் நிலையத்திற்கும்,ஏனைய தொழிற்சாலைகளுக்கும் வேண்டிய அளவு கனிமத்தை கொடுக்கமுடியாத பரிதாப நிலையிலிருந்தது. எனினும்.தடைகளை நீக்க கடின முயற்சிகளெடுக்கப்பட்டன. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப,, அந்த நாளும் வந்தது .ஜாம் ஜாம் என்று முன்னேற்ற பாதையில் பீடுநடைபோட்டு ,இன்று,ஒரு நவரத்தின நிறுவனமாக திகழ்வது நாடறிந்த உண்மை.

இந்த சரித்திரத்தை கூறுவதுமட்டும் என் நோக்கமல்ல. இந்தியாவிலேயே அறியப்படாத புதிய தொழில்நுட்பத்துடனும், எதிர்பாராத சுற்றுச்சூழலில் சிக்கி நாங்கள் திணறும்போது, ஒருவனது கஷ்டகாலத்தைப் பயன்படுத்தி, ஆதாயம் பார்க்க நினைத்த ஒருவரை எவ்வாறு விளித்து நம் வேதனையையும் ,வெறுப்பையும் வெளிப்படுத்துவது? 

அந்த மஹாநுபாவர்,நம் மாநிலஆளுனராக வந்திருந்து மண்டையைப்போட்டார் என்பது கிளைக்கதை. அவர் வேறுயாருமல்ல, சென்னாரெட்டி என்பவர்தான்

, மத்திய அமைச்சரான இவரின் அதிகாரத்திற்குட்பட்ட நெய்வேலி நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் சொத்துக்களை ஆந்திர மாநிலத்தமைந்திருந்த ஒரு மாநில பொதுத்துறை நிறுவனத்திற்க்கு கடத்திச்செல்ல அனைத்து முயற்ச்சிகளிலும் ஈடுபட்டார்!!

 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்.18000 ஊழியர்களும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம். ஊழ்வினையால் ,அவதார புருஷர்களான யெக்னேஷ்வரன், சாரியவர்களால் அப்பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டோம்.
 
 B W E 1145
                         
கடலூர் மணற்கல்லுடன் முதன் முறையாக மோதிக்கொண்ட நாள் என் வாழ்நாளில் மறக்க நினைக்கும் நாள்.

வாளிச்சக்கர அகழ் எந்திரம் BWE 1145 என்றும்போல் மண்ணை அள்ளிக்கொண்டிருந்தது, என்ன நடக்கிறதென்று யோசிக்குமுன்பே எந்திரம் பயங்கரமாக நடுங்கவாரம்பித்தது .வாளிச்சக்கரத்தின் சுழற்ச்சியின் வேகம் திடுதிப்பென குறைந்து, அகழ்வது தடைபட்டு எந்திரத்தை நிறுத்தவேண்டியதாகிவிட்டது

எந்திரம் நடுங்க ,நாங்களும் நடுங்கி,அதனை பின்நோக்கி நகர்த்தி, சக்கரத்தை தரையிறக்கி ,அருகில் சென்று பார்த்தால், வாளிகளில் பொறுத்தப்பட்டிருந்த அனைத்து பற்களும் மழுங்கிப்போனதுமல்லாமல் வாளிகளும்,பெரும் சேதத்துக்குள்ளயிருந்தன.

 வாளிகளையும், பற்களையும் மாற்றியபின்தான் இயக்கத்தை தொடரமுடியும் என்ற நிலையில்,நடுத்தள அமைப்பு (Middle Bench operation)ஷ்தம்பித்தது.

பராமரிப்புக்குழுவினருக்கு செய்தி அனுப்பப்பட்டது,அவர்களின் வருகைக்கு முன்னதாகவே, மற்ற பாகங்களை பரிசோதித்து, பராமரிப்பு பார்த்துக்கொண்டிருந்தோம். பிரதான குழுவினர் வந்து பழுதான வாளிகளையும், பற்களையும் மாற்றினார்கள்.
   
 
BWE 1145 இயக்க குழுவினரின் பின்புறம் காண்பது வாளி சக்கரம்,பற்கள்i

இந்நிலையில் எங்கள் முன் நின்ற கேள்வி, தொடர்ந்து அகழ்வதா வேண்டாமா என்பதுதான்,

அனைத்து தரப்பு அலுவலர்களும் குழுமியிருந்தனர்.எதிரிலிருந்த மண்மேட்டை இளக்கித்தான் எந்திரத்தை இயக்கவேண்டும் என்பதுதான் பெரும்பான்மையினரின் அபிப்ராயம்
.
மண்ணை இளகவைக்க, அதை தோண்டி வெடிவைக்கவேண்டுமெனில் .நடுத்தள அமைப்பின் உற்பத்தி சில நாட்களுக்கு பாதிக்கப்படும் .உற்பத்தி பாதிப்பை எற்க ஒரு தரப்பினர் விரும்பவில்லை.ஏதேதோ காரணங்களைக் கூறி எந்திரத்தை இயக்க வைக்க வலியுறுத்தினர்.(முன்பெழுதிய வர்க்க மோதலில் இதுவுமொன்று)

என்ன விலை கொடுத்தாவது உற்பத்தி செய்யவேண்டும் (Production at any cost) என்பது அவர்களின் தாரக மந்திரம்
.
 இயந்திரங்களை இயக்குபவர்களுக்கு (மகிழ்வுந்து ஓட்டுனராகட்டும்,விமானியாகட்டும்) அது ஜடப்பொருளல்ல,அதுவும் ஒரு ஜீவன். குழந்தையை பலிகொடுக்கா எந்த தாய் ஒப்புக்கொள்வாள்? முடிவெடுக்கும் உரிமையற்ற தாய் போல் வேதனைப்படுவதுதான் அவளுக்கு கிடைத்த வரமா!!!

உற்பத்தியை துவக்கு என்ற ஆணித்தரமான ஆணை பிறப்பிக்கப்பட்டது

.எனவே அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டவுடனே தலைகள் மறைய ஆரம்பித்தன,அவர்களுக்கு தலைபோகிற வேலைகளிருந்தனவோ என்னவோ?

 வாளிச்சக்கர அகழ்வானை அதன் தலையை தூக்கி அகழவேண்டிய மண்மேட்டு பகுதி நோக்கி நகர்த்தி சக்கரத்தை சுழலவிட்டு மண் தளத்தை சற்றே முகரவிட்டு, அழுத்தியதுமே, சிக்கி முக்கி கல் உராய்வாலுண்டாகும் தீப்பொறிபோல் பன்மடங்கு தீப்போறிகள் பறந்தன ,சட சடவென வெடிச்சத்தம் காதை துளைத்தது ,சுழல் சக்கரம் ஆடுபாதையில் மறுகோடியை அடையுமுன்பே  வலுவிழந்து நின்றுவிட்டது

.எதிர்பார்த்த ஆபத்து நிகழ்ந்தேவிட்டது. ஒரு சில நிமிடங்களில்,90 பற்களும் உடைந்து தூள் தூளாகிவிட்டன, என் கண் முன்னால் எனது நாலு வருட சம்பளத்திற்கிணையான மதிப்புள்ள பற்கள் துகள்களாக மண்ணோடு மண்ணாக கலந்த காட்சி வேதனையளித்தது என்பதைவிட இப்படியும் நடக்குமா என்ற அதிர்ச்சிதான் மேலோங்கியிருந்தது.

சுரங்கத்துள் வெடி வைத்து மண்ணை இளக்கி அகழ்வானை இயக்கவேண்டும் என்பதர்க்கு வலுவான காரணங்களுண்டு,அதேபோல் சுரங்கத்துள் வெடிவைக்கக்கூடாது என்பதர்க்கும் வலுவான காரணங்களுண்டு, ஆனால் எது சிறந்தது என்பதை இப்படி ஒரு விஷப்பரிட்சைதான் தீர்மானிக்கவேண்டியிருந்தது  என்பது ஒரு துரதிர்ஷ்டமான நிலமை என்பதைவிட மிகுந்த அவமானமான நிலமை என்பதே உண்மை.
   


, 

கருத்துகள் இல்லை: